கும்பகோணத்தில் விநாயகர் கோவிலை இடிக்க முயற்சி.. அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்..!
கும்பகோணம் குப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோவிலை இடிக்க அதிகாரிகள் முயற்சி செய்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் அதை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், குப்பங்குளத்தில் உள்ள விநாயகர் கோவிலும் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி, அதை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் முயற்சி செய்தனர்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து, "கோவில் இருக்கும் இடம் நீர்நிலையில் இல்லை. மீண்டும் அளவீடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தை மீண்டும் அளவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva