இளம்பெண்ணிடம் பரிகாரம் செய்வதாக கூறி பூஜை நேரத்தில் ஜோசியர் தலைமறைவு


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (16:10 IST)
இளம்பெண்ணிடம் பரிகாரம் செய்வதாக கூறி 10 பவுன் தாலிக்கொடியை அபேஷ் செய்து பூஜை நேரத்தில் தலைமறைவான ஜோசியருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
 
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தைபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). அவர், பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜோசியம் பார்த்து குறி சொல்லி வந்தார்.
 
இந்நிலையில், சுரேஷ்குமார் கடந்த 2015ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நேரு நகர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சுகுணா (20) என்பவரை சந்தித்து, ”உன் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதற்கு, பரிகாரம் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
 
பதறிப்போன சுகுணாவும் பரிகாரம் செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி சுரேஷ்குமார், சுகுணாவை சேலம் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வரவழைத்துள்ளார்.
 
அங்குள்ள சாமி சிலைக்கு முன்பாக வைத்து சுகுணாவின் தாலிக்கொடியை குடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி 10 பவுன் தாலிக்கொடியை வாங்கியுள்ளார். 10 பவுன் தாலிக்கொடியை பெற்றுக்கொண்டு சுரேஷ்குமார் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
 
பூஜை நடந்துகொண்டிருந்த நிலையிலேயே ஜோசியர்  தலைமறைவானதால், அதிர்ச்சியடைந்த சுகுணா, அரசு மருத்துவமனை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
 
உடனே, மருத்துவமனையிலிருந்து தப்பித்து செல்ல முயன்ற ஜோசியர் சுரேஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிவில், சுரேஷ்குமாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து நடுவர் உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :