1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (15:38 IST)

பச்சையப்பன் கல்லூரி பேராசியர்கள் நியமனத்தில் ஊழல் - கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டித்து பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ், பச்சையப்பன் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
 
 
இக்கல்லூரிகளில் 2014 ஜனவரி 26, ஜூன் 4இல் உதவிப் பேராசிரியர் நிரந்தரப் பணி நியமனம் நடைபெற்றது. இதில், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
உதவிப் பேராசிரியர் நிரந்தரப் பணி நியமனத்தில் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். நிரந்தர பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களில் யுஜிசி தகுதியில்லாத நபர்களை பல்கலைக்கழக மானியக் குழு பணி நீக்கம் செய்யவேண்டும்.
 

 
நியமனத்தில் ஊழல் புரிந்த அறக்கட்டளை நிர்வாகிகள், துணைபுரிந்த அரசு அதிகாரிகளை சட்டத்திற்குட்டு தண்டிக்க வேண்டும். 200க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பியது குறித்து வெளிப்படையான நியமன அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
 
இது குறித்து பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ”உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் முறைகேடு நடைபெற்றதுபோல் இந்த பணி நியமனத்திலும் நடைபெற்றுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சுமார் 200 உதவி பேராசியர்கள் மற்றும் 150 அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
இதில், ஏறக்குறைய 70 கோடி முதல் 80 கோடி வரை ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் முறைகேட்டில் அறக்கட்டளை நிர்வாகிகள் முதல் உயர்கல்வி அமைச்சர் வரை ஈடுபட்டுள்ளனர். அதனால், அறக்கட்டளை நிர்வாகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
 
மேலும், நாங்கள் 8 முதல் 14 ஆண்டுகள் வரை கவுரவ விரைவுரையாளர்களாக பணி புரிந்து வருகிறோம். எங்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் 10 மாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கப்படுவதில்லை.
 
இது மட்டுமல்லாமல், தற்போது பணியமர்த்தப்பட்டவர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படாமல், பணம் செலுத்தி பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த முறைகேட்டை கண்டறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.