வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2015 (14:58 IST)

துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சீமான் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஆந்திராவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
சீமான் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
ஆந்திர சிறப்பு அதிரடி படை காவலர்கள், கடந்த 7 ஆந் தேதி திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் 20 அப்பாவி தமிழர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். போலீஸ் தரப்பில், செம்மரங்களை வெட்ட வந்த கும்பல் என்றும் அவர்களை பிடிக்க சென்ற போது அவர்கள் தாக்கியதால், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறியுள்ளனர். ஆனால் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் செம்மரங்கள் எதுவும் இல்லை.
 
சம்பவ இடத்தில் கிடந்த செம்மரக் கட்டைகள் எல்லாம் போலீசாரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு, சம்பவ இடத்துக்கு கொண்டு வந்து போடப்பட்டவை. மேலும், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் தலை, நெற்றி, மார்பு ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்துள்ளது. அவர்களது உடலில் தீக்காயங்களும் உள்ளது. எனவே, போலீசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது. போலீசாரின் இந்த செயலால் அப்பாவி தமிழர்கள் 20 பேர் பலியாகியுள்ளனர்.
 
போலீஸ் தரப்பில் சொல்லப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும், செம்மரக்கட்டைகளை கடத்தும் கும்பலின் தலைவர், கூலி ஆட்களை அழைத்து வரும் இடைத்தரகர்கள், வாகன ஓட்டிகள் யாரும் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாரும் பிடிபடவோ, சாகவோ இல்லை.
 
எனவே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆந்திர போலீசாரால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு, அரங்கேற்றப்பட்ட நாடகம். எனவே, இந்த 20 பேரது உடலை சென்னையில் உள்ள பன்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில் மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடந்த 8 ஆம் தேதி கோரிக்கை மனுவை அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 20 பேரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசுக்கும், சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந் த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.மாலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து அந்த மாநில டி.ஜி.பி.க்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த வழக்கை இந்த உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது" என்று கூறி அந்ம  மனுவை தள்ளுபடி செய்தது.