வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 9 ஜனவரி 2016 (01:53 IST)

தலித் முதியவர் மரணம்: அரசு அதிகாரிகளுக்கு வைகோ கண்டனம்

தலித் முதியவர் மரண சம்பவத்தில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருநாள் கொண்டச்சேரி என்ற ஊரில் வசித்து வரும் 40 தலித் குடும்பங்களில், யாராவது இறந்து போனால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கடலாழி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு பாதை வசதி இல்லாததால், வயல் வரப்பு வழியாகத்தான் உடலைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை.
 
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருநாள் கொண்டச்சேரியில் குஞ்சம்மாள், 80 என்பவர் இறந்தபோது, உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
 
இந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து, இறந்து போனார். அவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாததால் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர்.
 
மறைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லமுத்து சடலத்தை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முழு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. மாறாக, தலித் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
 
மேலும், செல்லமுத்துவின் உடலை வலுக்கட்டாயமாக தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ள அரசு அதிகாரிகளின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார்.