வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (12:03 IST)

பிரபல கடைகளில் திருடி புதுக் கடை நடத்திய ’கில்லாடி’ பெண்

சென்னையில் பல ஜவுளிக்கடைகளில் துணிகளை திருடி, ஆந்திராவில் துணிக்கடை நடத்திய பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த பர்கானா (29). இவர், சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளிலும், செல்போன் கடைகளிலும், நகைக்கடைகளிலும் திருடியதின் பேரில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
 
இவருக்கு திருமணமாகி கணவனும், குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், பர்கானா ஆந்திராவில் செல்போன் கடையும், துணிக்கடையும் நடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
 
இதற்கிடையில், தியாகராயநகர் பகுதியில் ஒரு பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய பர்கானாவை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். மேலும், பர்கானாவின் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டனர்.
 
அப்போது, கடையில் திருடி அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 1,500 புடவைகளும், செல்போன்களும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், விலையுயர்ந்த பட்டுப்புடவைகளும் செல்போன்களிம் அடங்கும்.
 
மேலும், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் திருடிய நகைகளையும், புடவைகளையும், செல்போன்களையும் ஆந்திராவிற்கு கொண்டு சென்று, தான் நடத்தும் கடைகள் மூலம் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அவரை காவல் துறைடினர் கைது செய்துள்ளனர்.