ஆந்திரா என்கவுன்டர்: 20 பேரை படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை - பாமக உண்மை கண்டறியும் குழு

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified திங்கள், 20 ஏப்ரல் 2015 (11:24 IST)
போலி என்கவுன்டர்களை தடுத்து நிறுத்த, ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்களை படுகொலை செய்த அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாமகவின் உண்மை கண்டறியும் குழு தலைவர் கூறினார்.
பாமகவின் உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் வழக்கறிஞர் பாலு தலைமையில், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர மாநில வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளில் ஒன்று கூட கடைபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து, இரு மாநிலங்களின் தலையீடும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியோ அல்லது சிபிஐ மூலமாகவோ விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிஐ விசாரணையில், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற போலி என்கவுன்டர்கள் தடுத்து நிறுத்தப்படும்.
மேலும், பொய் குற்றச்சாட்டுகளில், ஆந்திராவின் கடப்பா, நெல்லூர், ராஜமுந்திரி, சித்தூர் சிறைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்மர கடத்தலின் மூளையாக செயல்படுவதே ஆந்திர மாநிலத்தவர்கள் தான். குறிப்பாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள லால் பாஷா, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள புல்லட் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இதில் புல்லட் சுரேஷ் என்பவர் சந்திரபாபு நாயுடு கட்சியை சேர்ந்தவர்.
பிடிபட்ட செம்மரக்கட்டைகளை ஆந்திர மாநில அரசு வெளி மாநிலங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. எனவே, இது வியாபார நோக்கில் நடைபெற்றுள்ள படுகொலை.

ஆந்திர மாநில அரசு இதுவரை போலீஸ் அதிகாரிகள் பட்டியலை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பவில்லை. எனவே, சிபிஐ விசாரணை வளையத்திற்குள் ஆந்திர டி.ஐ.ஜி. காந்தராவை கொண்டு வந்தால், அவருக்கு உத்தரவிட்டது யார்? இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார்? யார்? இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பதெல்லாம் தெரிய வரும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு பாமக வழக்கறிஞர் பாலு கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :