1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 25 ஜூலை 2015 (01:28 IST)

ஜெயலலிதாவை சந்திக்க காத்துள்ளேன்: வைகோ

ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், தமிழக முதலமைச்சரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைக்க தான் காத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை, விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த 14 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது, ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆந்திர அரசு இதற்கு நீதி மன்றத்தில் தடை பெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை உடனே நடைபெற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
 
ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க கடந்த 15ஆம் தேதி மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், தந்தை பெரியார் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடிதம் கொடுத்துள்ளோம். எங்களுக்கு வரும் 29ஆம் தேதி முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.