செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 31 மே 2015 (10:54 IST)

சிகரெட்டுகளின் சாம்பலால் நிரப்பப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை இனி ரோஜா மலர்களால் நிரப்புவோம்: அன்புமணி

உலக புகையிலை எதிர்ப்பு நாள் தினத்தை முன்னிட்டு, இதுவரை சிகரெட்டுகளின் சாம்பலால் நிரப்பப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை இனி ரோஜா மலர்களால் நிரப்ப, உலக புகையிலை எதிர்ப்பு நாளில் மக்கள் உறுதியேற்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒருநாள் முழுவதும் சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகை புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்தாமல் இருக்குமாறு உலகம் முழுக்க வாழும் மக்களிடம் கோரிக்கை வைத்தும், அதை ஊக்குவிப்பது தான் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
 
நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகுதான், புகையிலையின் தீமைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
 
புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 40 சதவீதம், எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நான் கொண்டுவந்தேன். அது கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 85 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். 
 
ஆனால், புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அளித்த சர்ச்சைக்குரிய பரிந்துரைகளை ஏற்று, இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுவிட்டது.
 
அதன்பின்பு, இந்த விஷயத்தில், பிரதமரே தலையிட்டு எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிட ஆணையிட்டதாக செய்தி வெளியான போதிலும், எந்த  மாற்றமும் ஏற்படவில்லை.
 
மக்களின் நலன் கருதி, புகையிலையின் தீமைகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்திருத்த மசோதாவை வரும் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
 
இந்த கோரிக்கையை முன்வைத்து, மத்திய அரசை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 10 லட்சம் கையெழுத்துக்களை இன்று (மே 31 ஆம் தேதி) தொடங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த இயக்கத்தை சென்னையில் நான் தொடங்கி வைக்கிறேன். 
 
புகையிலைப் பொருட்களை வெறுத்து ஒதுக்க வேண்டியதும், அதன் தீமைகள் குறித்து மற்றவர்களிடம் விளக்க வேண்டியதும் மக்களின் சமூகக் கடமையாகும்.
 
இன்று ஒருநாள் புகையிலையை தற்காலிகமாக கைவிடுவோம், நாளை முதல் புகையிலைப் பொருட்களை நிரந்தரமாக கைவிடுவோம் என்பது தான் மக்களுக்கு பாமக வைக்கும் முக்கிய கோரிக்கையாகும்.  
 
இதுவரை, சிகரெட்டுகளின் சாம்பலால் நிரப்பப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை இனி ரோஜா மலர்களால் நிரப்ப, உலக புகையிலை எதிர்ப்பு நாளில் மக்கள் உறுதியேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.