1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (15:58 IST)

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக ஆளுநர் ரோசய்யா செய்த செலவு பலகோடி: ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்

2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யா நான்கு ஆண்டுகளில் ஆளுநர் அலுவலகத்தை பராமரிப்புக்கு 1.27 கோடியும், பயணச் செலவு 1.22 கோடி செலவு செய்திருக்கிறார் என்ற தகவலை கோவை வழக்கறிஞர் திரு.லோகநாதன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.


 

 
இவர் பெற்றிருக்கும் தகவல் படி, தமிழக ஆளுநர் ரோசய்யாவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளானா செலவு விபரங்கள்:
156.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ராஜ்பவன் வளாகம், ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை பராமரிக்க 1.27 கோடி செலவாகியுள்ளது. 
 
2011 ஆகஸ்டு முதல் 2015 மே மாதம் முடிய மின் கட்டணம் 36.24 லட்சம். மேலும், மாதம் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டணம் சராசரியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் அரசு செலுத்தி வருகிறது.
 
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ், ஸ்கோடா சொகுசு கார்கள் உட்பட 4 கார்கள், ஒரு மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிதாக வாங்கப்பட்டுள்ளவை. இவற்றின் பராமரிப்பு செலவு மட்டும் 11 லட்சம் ரூபாய் ஆகும்
 
மேலும், நான்கு ஆண்டுகளில் எரிபொருள் செலவு 52 லட்ச ரூபாய் இது தவிர, ஏற்கனவே இருந்த 3 கார்கள், ஆட்டோ பராமரிப்பு செலவு  25 லட்ச ரூபாய்.
 
நான்காண்டு தொலைபேசிக்கட்டணம் சுமார்  36 லட்ச ரூபாய். கிண்டி ராஜ்பவனில் பணியாற்றும் 83 பேருக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 22.67 லட்சம் அரசு தருகிறது. உதகையில் 86.72 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 24 பேருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 6.47 லட்சம் தரப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆளுநரின் பயணத்துக்கு ரூ.1.22 கோடி செலவாகியிருக்கிறது.
இதில் 470 முறை விமானப் பயணம் செய்து இருக்கிறார்.
 
 
ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்து, அரசு விழாக்களில் 15 சதவிகிதம் மட்டுமே அவர் பங்கேற்றுள்ளார், இதில் அமைச்சரவை பதவி ஏற்பு விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள் மட்டும் தான். ஆனால் ஆளுநர் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சிகள் 85 சதவிகிகம் ஆகும். இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் அரசு வாகனங்களே பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், தனியார் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட பரிசுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.