யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி இறுதி முடிவை எடுப்பதற்கு பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி குறித்த முழு விவரம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி உறுதியாக அறிவிக்கப்படும் என்று கூறினார். தற்போதுள்ள அரசியல் நிலவரத்தில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுவதை சுட்டிக்காட்டிய தினகரன், அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இந்த முடிவு, தனது கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் இணைவது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது நயினார் நாகேந்திரனின் சொந்த கருத்து என்றும், அமமுகவின் நிலைப்பாடு குறித்து இன்னும் ஒன்றரை மாதத்தில் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.
மேலும், அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும், அமமுக வெற்றி கூட்டணியில் இணையும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
Edited by Mahendran