நயினார் நாகேந்திரனை அவசரமாக அழைத்த அமித்ஷா.. அண்ணாமலை விவகாரம் குறித்து ஆலோசனையா?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென அவசரமாக டெல்லிக்கு அழைத்து இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சுற்றி பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்து வரும் வேளையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை அவர்கள் பாஜகவிலிருந்து விலகி, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. இந்த சூழலில், தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய பலம், உட்கட்சி நிலவரங்கள் மற்றும் அண்ணாமலையின் புதிய அரசியல் நகர்வுகளால் கட்சிக்கு ஏற்பட போகும் தாக்கங்கள் குறித்து நயினார் நாகேந்திரனுடன் அமித்ஷா விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தென் தமிழகத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட நயினார் நாகேந்திரனிடம், தமிழகத்தில் கட்சியை தொய்வில்லாமல் அடுத்த கட்டத்திற்கு எவ்விதம் கொண்டு செல்வது மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அண்ணாமலை விவகாரத்தால் தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கட்சியின் அடுத்தகட்ட பாதையைத் தீர்மானிக்கவுமே இந்த அவசரச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva
