வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 11 ஜூலை 2015 (03:05 IST)

தமிழகத்தில் ஜிகாதி நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் கவனம் கொள்ள இராம.கோபாலான் கோரிக்கை

தமிழகத்தில் தொடரும் ஜிகாதி நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலான் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

இது குறித்து, இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக அரசு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்றமும்,
மத்திய உள்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஜுலைமாதம் 28ஆம் நாள் சென்னையில் பத்ரு போர் என்ற போராட்ட முழக்கத்தை தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. இந்தஅறிவிப்பில், இந்தப் போராட்டத்திற்குப் பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை. சிறை செல்லவும் உயிர் தியாகம் செய்யவும் தயாரானவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்துள்ளது தமிழ்நாடு தௌஹீத் ஜமாத். இந்த அறிவிப்பை ரம்ஜான் மாதம் 17ஆம் நள் நடத்த இருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
முஸ்லிம்கள் முதன் முதலில் நடத்திய நேரடிப் போர் தான் இந்த பத்ருபோர் என்பது. இந்தப் போரில் முஸ்லீம் அல்லாதோரைக் கொன்று குவித்து, தனது ஆதிக்கத்தை முகம்மதுநபி நிலைநாட்டினார் என்பது வரலாறு.
 
இந்தப் போர் அறிவித்து, போர் நடத்தியது ரம்ஜான் மாதம் 17ஆம் நாள்தான். ஆகவே, சரியாக அந்த நாளைத் தேர்வு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தௌஹீத் ஜமாத். தமிழக அரசைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றும்,போருக்குத் தயாராகுங்கள் என்றும், இளைஞர்களை வன்முறைக்குப் பகிரங்கமாக அழைப்பதன் மூலம், இதற்கு முன்பு ராமநாதபுரம், ஆம்பூர் போன்ற பகுதிகளில் நடந்த திட்டமிட்ட கலவரங்களை வைத்துப் பார்க்கும் போது, ஜூலை 28 ஆம் தேதி அன்றும் முஸ்லிம்கள் சென்னையில் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்றே தோன்றுகிறது.
 
ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் அழைப்பு விடுத்தபோராட்டங்கள் வன்முறையிலேயே முடிந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக் காட்டாக விஸ்வரூபம் திரைப்படத்தடையை ஒட்டி நடந்த திரையரங்குகள் மீதான பெட்ரோல் குண்டுவீசி நடத்திய தாக்குதல்கள், இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைக் காரணம் காட்டி அண்ணாசாலையைக் கலவர பூமியாக்கியது, ஆம்பூரில் காவல்துறையினரை ஓடஓட விரட்டி வெட்டியது, பெட்ரோல் குண்டு வீசியது, பெண் போலீசாரை மானபங்கம் செய்தது, ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டினம், தொண்டி போன்ற பகுதிகளில் பேருந்துகளைச் சேதப்படுத்தி ஹிந்துக்களைக் குறிவைத்துத் தாக்கியது ஆகியவற்றைச் சொல்லலாம். எனவே இந்த உண்மை கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
 
பகிரங்கமாகவே, அரசுக்கு எதிராகப் போர் புரியப் போகிறோம்; இளைஞர்கள் மட்டுமே வரவும் என்று அறைகூவல் விடுக்கும் அளவுக்கு இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் தழைத்து வளர்ந்து தமிழகத்தையே தாலிபான் நாடாக மாற்றியுள்ளது.
 
இந்தச் சூழ்நிலையை வளரவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் எற்படும் அபாயம்உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்வதுடன் இந்த அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இது மாதிரியான விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.
 
ஆம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட காவல்துறையும், ஊடகங்களும் பெருத்த அவமானத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழக அரசோ இதனைக் கருத்தில் கொள்ளாமல், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
 
எனவே, இந்த விவகாரத்தில், உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், இது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
 
தமிழகத்தில் தொடரும் ஜிகாதி நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் கவனம் கொடுத்து, இதனை முழுமையாக தடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.