1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2015 (14:46 IST)

’அமேசான்’ தமிழர்களை இழிவுபடுத்துகிறதா? விளம்பரத்திற்கு கடும் கண்டனம்

அமேசான் நிறுவனம் ‘ஒரு கிலோ தங்கம் வெல்லலாம்’ எனக் குறிப்பிட்டுள்ள தனது விளம்பரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகைகளில் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இதனால் ஒரு சில நாட்களில் மட்டும் அறிவிக்கப்படும் தள்ளுபடி மூலம் பல கோடி விற்பனை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது. இந்த விளம்பரம் வாடிக்கையாளர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
 
'ரூ.299-க்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது. ஆனால், அது ஒரு கண்டிஷனையும் சேர்த்து விதித்துள்ளது.
 
அதாவது, அமேசான் நிறுவனம் தங்களது அலுவலக விதிமுறைகளில் 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி இல்லை' என குறிப்பிட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 
இதனால், பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் கொதித்துப் போயுள்ளனர். தமிழகத்தில் விளம்பரத்தைக் கொடுத்து, தமிழ்நாட்டில் வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனம் தமிழர்களுக்கு தகுதி இல்லை என எவ்வாறு அறிவிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இணையத்தளங்களில் இது குறித்து விவாதங்களும், கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
 
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் காவல் துறையினரிடம் அளித்துள்ள புகாரில், ''இது தமிழர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சி. அமேசானின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.