வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 19 மே 2014 (10:08 IST)

மு.க.அழகிரி தான் நாடகமாடுகிறார் - துரைமுருகன்

மு.க.அழகிரி தான் நாடகம் ஆடுகிறார் என்று திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
 
திமுகபொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா முடிவையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்த திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது:- 
 
நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின், திமுகதலைவர் கருணாநிதியிடம் ராஜினாமா செய்யபோவதாக அறிவித்தார். திமுக தலைவர் கருணாநிதி அப்படி எல்லாம் செய்வதற்கு இது ஏற்ற நேரம் இல்லை. அது தேவையும் இல்லை. திமுகவுக்கு அவர்(ஸ்டாலின்) வழிகாட்ட வேண்டியது இருக்கிறது. 
 
ஒரு தோல்வியால் திமுக அழிந்து விடக்கூடியது அல்ல. ஆண்டாண்டு காலங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற பல சூழலை கருத்தில் கொண்டு, ஒரு இளைஞராக இருக்க கூடியவரும், வருங்காலத்தில் இயக்கத்தை வழிநடத்தும் ஆற்றல் கொண்டவருமாக இருக்கிற இத்தகையவரின் இந்த முடிவு தேவையில்லாதது என்று தலைவர் தொண்டனுக்கு அறிவுறுத்துவது போலவும் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினிடம் தெரிவித்தார். 
 
மு.க.ஸ்டாலின் தான் வகிக்கின்ற பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து எங்களை போன்றவர்கள் கூட, கட்சி தலைமை கழக நிர்வாகிகள், வட்ட, பகுதி கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், லட்சக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வற்புறுத்தினோம். தலைவர் கருணாநிதியின் அறிவுரையை ஏற்றுக்கொண்டும், எங்களை போன்றவர்களின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டும் எங்களை எல்லாம் மகிழ்விக்க தக்க வகையில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து வற்புறுத்தபோவதில்லை என்று அறிவித்து இருக்கிறார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று துரைமுருகன் கூறினார். 
 
அப்போது, திமுகபொருளாளர் மு.க.ஸ்டாலினின் ராஜினாமா முடிவு நாடகம் என்று மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் தான்(மு.க.அழகிரி) நாடகம் ஆடுகிறார்’ என்று ஆவேசமாக துரைமுருகன் பதிலளித்தார்.