செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2014 (10:09 IST)

அதிமுக அரசு தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பை பஞ்சாபி மொழியில் பயில, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பதுபோல, அதிமுக அரசும் தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் மருத்துவ நூல்களை இனிமேல் ஆங்கிலத்தில் படிக்கத் தேவையில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
 
பஞ்சாபி மொழியிலேயே மருத்துவ நூல்களை மொழிமாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
தாய் மொழியில் படித்தால்தான் மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறன் அதிகமாகி அவர்களின் அறிவு தொடர்ந்து கூர்மையாகும் என்பதை பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
 
இதற்காக பஞ்சாப் அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில், பாபா பரீத் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் துறை, மருத்துவ நூல்களைத் தங்களது சொந்த மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் இறங்கி உள்ளது. இப்பணியில் 60 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
இதுபோல, திமுக ஆட்சியிலும் 2010ஆம் ஆண்டு அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பரிவுகளில் இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்கள் தாய் மொழியில் தமிழ் மொழியில் கற்க வகை செய்யப்பட்டது என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.