செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 22 ஜூன் 2025 (15:22 IST)

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மேலும் பல கட்சிகளை இணைத்து வலுவான அணியை உருவாக்க ரகசிய வியூகங்களை வகுத்து வருகிறது.
 
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர, திரைமறைவில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் மற்றும் திருமாவளவன் இருவரும் கூட்டணிக்கு வந்தால், அதிமுக அணி மிகப்பெரிய பலம் பெறும் என்று அதிமுகவினர் கருதுகிறார்கள்.
 
இதற்காக, இருவருக்கும் கூட்டணியில் உரிய முக்கியத்துவம் வழங்க அதிமுக தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இரண்டு துணை முதலமைச்சர் பதவிகளை உருவாக்கி, இருவருக்கும் பிரித்துக் கொடுக்கவும் இரட்டை இலக்கத்தில் விசிகவுக்குத் தொகுதிகள் ஒதுக்கவும் அதிமுக தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
 
பாஜகவுடன் கூட்டணி இருப்பதால், திருமாவளவன் தயக்கம் காட்டி வருகிறார். இருப்பினும், அவரைச் சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் சத்தமில்லாமல் நடந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இது குறித்து ஓர் அதிமுக மூத்த நிர்வாகி கூறுகையில், "திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அதிமுக அணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகின்றன. விரைவாகக் கூட்டணியை வலுப்படுத்தி, வரும் தேர்தலில் வெற்றி பெறுவதே எடப்பாடி பழனிசாமியின் லட்சியம்," என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran