1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (13:25 IST)

காஷ்மீர் பிரச்சனைக்காக எம்.ஜி.ஆர். பாட்டுப்பாடிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்சனை குறித்த விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன், எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்' என்ற பாடலை பாடியது அனைவரையும் ஈர்த்தது.



 
 
புதன்கிழமை காஷ்மீர் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பல்வேறு கட்சியினரும் தங்கள் விவாதங்களை முன்வைத்தனர். இதுதொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் தனது உரையைத் தொடங்கினார்.
 
அப்போது, தொடக்கத்தில் 'காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்' என்ற புகழ்பெற்ற பிரபல பாடலை பாடி தனது உரையைத் தொடங்கினார். மேலும், இது முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
 
அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், ’நீங்கள் விரும்பினால் தொடர்ந்து முழுப்பாடலையும் பாடலாம்’ என்றார். அதற்கு நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன் முழுப் பாடுவார் என்றும் முழுப்பாடலையும் பாடி நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், ’காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய தேசம் ஒன்றே. நான் காஷ்மீருக்கு சொந்தமானவன். காஷ்மீர் எனக்குச் சொந்தமானது.
 
காஷ்மீரில் விளையும் குங்கமப்பூ பிரபலமானது. காஷ்மீரத்து குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும் என்ற நம்பிக்கை. குங்குமப்பூவை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணியும் உட்கொள்வது வழக்கம். என் தாய் சாப்பிட்டார். என் மருமகள் சாப்பிட்டார். ஏன் என் பேத்தியும் எதிர்காலத்தில் சாப்பிடுவார்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் காஷ்மிர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எனக்கு நிறைய விவரங்கள் தெரியவந்தது. அதுவரை தஞ்சாவூர் மட்டுமே செழிப்பான விவசாய நிலம் என்ற எனது எண்ணம் உடைந்தது. காஷ்மீர் அவ்வளவு செழிப்பான பகுதி. 
 
அப்படிப்பட்ட காஷ்மீர் எப்போதும் அமைதியானதாக அழகானதாகவே இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள், தமிழக முதல்வரின் விருப்பம். காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.