வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (09:35 IST)

அதிமுக வேட்பாளர் பட்டியல் தாமதம் - நால்வர் அணி மீதான அதிருப்திதான் காரணமா?

அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு நால்வர் அணி மீதான அதிருப்தியே காரணமாக கூறப்படுகிறது.


 

கடந்த காலங்களில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது அதிமுகவின் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் முதல்வர் ஜெயலலிதா அமைதி காத்து வருகிறார்.
 
நால்வர் அணியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் வேட்பாளர் களாகிவிடக் கூடாது என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளதால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தாமதமாவதாகக் கூறப்படுகிறது.
 
அதிமுகவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவே முதல்வருக்கு அடுத்த அதிகார மையமாக வலம் வந்தது.
 
கட்சியில் சாதாரண நகரச் செயலாளர் நியமிப்பது முதல் வேட்பாளர் தேர்வு வரை இந்த நால்வர் அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆனால், சமீபகாலமாக நால்வர் அணி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணத்தால், அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
 
அதிமுக வேட்பாளர் நேர்காணலில் இவர்கள் இடம் பெறவில்லை. கட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் வரை அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை, மாவட்டச் செயலாளர்கள் போன்ற வகைகளிலேயே வேட்பாளர் பரிந்துரையை அதிமுக தலைமை பெற்றுள்ளது.
 
வேட்பாளர் பட்டியலில் நால்வர் அணி ஆதரவாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதாலேயே அவர்களின் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். பெறப்பட்டுள்ள பட்டியலும், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறதாம்.