திமுக ஆட்சியில் அதிமுக ‘பி’ டீம்; அதிமுக ஆட்சியில் திமுக ‘பி’ டீம் - ஜி.ஆர். குற்றச்சாட்டு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (13:29 IST)
ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக ஆட்சியில் இருக்கும் போது அதிமுக ‘பி’ டீமாகவும், அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திமுக ‘பி’ டீமாகவும் செயல்படுகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
 
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா அணி சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியையும், ஆயிரம் விளக்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதியையும் ஆதரித்து ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ”கிரானைட் முறைகேடு தொடர்பாக கடந்த 4 மாதங்களாக கேள்வி எழுப்பி வருகிறோம். ஜெயலலிதாவும், கருணாநிதியும் பதிலளிக்க மறுப்பது ஏன்? விசாரணை அதிகாரி சகாயம் அறிக்கை அடிப்படையில் திமுக, அதிமுக-வினர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
 
ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக ஆட்சியில் இருக்கும் போது அதிமுக ‘பி’ டீமாகவும், அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திமுக ‘பீ’ டீமாகவும் செயல்படுகின்றனர்.
 
சென்னையில் முதலமைச்சர் பிரச்சாரத்தை தொடங்கியபோது கூடிய கூட்டத்தைவிட, நமது அணி மாமண்டூரில் நடத்திய கூட்டத்தில் இரண்டு மடங்கு அதிகம் கூடியது. கல்லூரி மாணவர்களில் 70 விழுக்காட்டினரின் பார்வை நமது அணியின் பக்கம் உள்ளது. காற்று மாறி வீசத்தொடங்கிவிட்டது. நமது அணியே ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :