1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (16:02 IST)

நத்தம் விஸ்வநாதன் மகன் பல கோடி ரூபாய் சப்ளை - மேலும் பல பகீர் தகவல்கள்

அன்புநாதனிடம் சிக்கிய ரூ. 5 கோடி பணத்தை விஸ்வநாதனின் மகன் அமர்நாத்தே அன்புநாதனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

 
கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தலின்போது, கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பைனான்சியர் அன்புநாதனின் குடோனில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்து ரூ. 10 லட்சத்து 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
 
மேலும், அன்புநாதனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 4 கோடியே 77 லட்சம் சிக்கியது. அங்கிருந்த 11 பணம் எண்ணும் இயந்திரங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வண்டி ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் டைரிகளும் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. அதில், பல முக்கிய புள்ளிகளுக்கு பினாமியாகவும், கறுப்புப் பணத்தை மாற்றும் வேலையையும் செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.
 
அன்புநாதனின் 2 செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் தற்போதுள்ள மூத்த அமைச்சர்கள், ஒரு எம்.பி., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அன்புநாதனுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
 
சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி ஆகியோருக்கும் அன்புநாதனுடன் உள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது.
 
இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடியாக கடந்த திங்கட்கிழமையன்று நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும், சைதை துரைசாமி வீட்டிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், நத்தம் விஸ்வநாதனின் கட்சிப் பதவிகள் அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா பறித்தார்.
 
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலின்போது, அன்புநாதன் வீடு மற்றும் குடோனில் சிக்கிய பணம் ரூ. 5 கோடி, நத்தம் விஸ்வநாதன் குடும்பத்திற்கு சொந்தமானது என்பதையும், அந்த பணத்தை விஸ்வநாதனின் மகன் அமர்நாத்தே அன்புநாதனுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.