பள்ளிக்கல்வித்துறையை அடுத்து உயர்கல்வித்துறையில் விசாரணை: அமைச்சர் மரிய வில்சன்...
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் விரைவில் தீவிர விசாரணை நடத்தப்படும் என நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியவில்சன், "முதலமைச்சரின் மேசையில் இருக்கும் மூன்று கோப்புகளில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுகவினர் பதறி போய் அலறுகின்றனர். பள்ளிக்கல்வி போன்ற அடிப்படை துறையிலேயே ஊழல் செய்துவிட்டு, தற்போது சிறையில் சிறப்பு சலுகைகளும் ஜாமீனும் கோருவது மன்னிக்க முடியாதது" என்று சாடினார்.
மேலும், பள்ளிக்கல்வி துறையைத் தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் இருந்த உயர்கல்வி துறையின் மீதும் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி மற்றும் கோவி. செழியன் ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சர்களாக பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு ஊழலுக்கு எதிராக எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் திமுக தலைவர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

