1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (10:04 IST)

ஜெயலலிதாவா? சசிகலாவா?: வெற்றி பெற்றவர்கள் ஆசி பெறப்போவது யாரிடம்?

ஜெயலலிதாவா? சசிகலாவா?: வெற்றி பெற்றவர்கள் ஆசி பெறப்போவது யாரிடம்?

தஞ்சை, அரவக்குறிச்சி சட்டப்பேரவை பொது தேர்தலிலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வெற்றி வேட்பாளர்கள் கட்சி தலைவர் ஜெயலலிதாவிடம் ஆசி பெற செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறார். இந்நிலையில் அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் கூட்டு முயற்சியால் நடந்து முடிந்த  மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளனர்.
 
தஞ்சையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதியை அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 26846 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை விட 23673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
 
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை விட 42670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த வெற்றி வேட்பாளார்கள் முதல்வர் ஜெயலலிதா தங்களை அழைத்து ஆசி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கட்சி தலைமையை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை அதிமுக வேட்பாளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. அதிமுக வேட்பாளர்களின் வெற்றி மகிழ்ச்சியை அறிக்கை வாயிலாக ஜெயலலிதா வெளிப்படுத்தியிருந்தாலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களை போனில் அழைத்து வாழ்த்துக்கூறியது சசிகலா தான் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்து ஆசி பெறுவதற்கான சூழல் தற்போது அதிமுகவில் இல்லை என தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற முடியாத வருத்தத்தில் உள்ள வேட்பாளர்கள் சசிகலாவை சந்தித்து ஆசி பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.