1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: திங்கள், 21 மார்ச் 2016 (04:52 IST)

அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மீது தேர்தல் ஆணையரிடம் புகார்

அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மீது தேர்தல் ஆணையரிடம் புகார்

தமிழக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மீது தலைமை தேர்தல் ஆணையரிடம் மக்கள் செய்தி மையம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளது.
 

 
தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் மக்கள் செய்தி மைய நிறுவனர் அன்பழகன் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு சுற்றுச் சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தன் சொந்த காரில் ( TN 33 AL 5656) சுழல் விளக்கு, அரசு கோபுர சின்னத்துடன் வலம் வருகிறார் – அதே போல் அந்த காரை அமைச்சர் மகன் திவாகரும் பயன்படுத்துகிறார் – இது தொடர்பான புகார்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் 4.3.15 அன்று அமுலுக்கு வந்துவிட்டது.  ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாடு சுற்றுச் சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தன் சொந்த காரில்( TN 33 AL 5656) சுழல் விளக்கு, அரசு கோபுர சின்னத்துடன் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே காரை அமைச்சர் மகன் திவாகரும் பயன்படுத்தி, கல்லூரிகளில் பிரச்சாரம் செய்கிறார். இந்த காரை பார்த்தவுடன், மூன்று மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறார்கள்.
 
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் கார்த்திகேயன், தினமும் காலை முதல் இரவு வரை சுற்றுச் சூழல்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், வீட்டில் முகாமிட்டு, அங்கிருந்துதான் அரசு அலுவலகத்தை நடத்தி வருகிறார்.
 
அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் காரை பறிமுதல் செய்து, அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அவரது மகன் திவாகர் மீதும்  வழக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் – செயலாளர் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.