வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2016 (00:21 IST)

தமிழக அமைச்சரின் அலுவலகத்திற்கே இந்த நிலையா? ராமதாஸ் கேள்வி

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற போது, அப்பாவி மக்களை தமிழக காவல் துறை எப்படி பாதுகாக்கப் போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜுவின் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் மதுரை காலவாசல் சந்திப்பு அருகில் சம்மட்டிபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
 
இந்த அலுவலகத்திற்கு இரு சக்கர ஊர்தியில் வந்த இருவர், பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.  மேலும், மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகளும், நாட்டு வெடிகுண்டும் வீசப்பட்டுள்ளது.
 
இதற்கு காரணம் யார் என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், சட்டம் -ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது.
 
தமிழக அமைச்சரின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற போதில், அப்பாவி மக்களை தமிழக காவல் துறை எப்படி பாதுகாக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது அச்சமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.