கோட்டையிலிருந்து அதிமுக அரசு வெளியேற வேண்டும்: மு.க.ஸ்டாலின்


K.N.Vadivel| Last Updated: வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (05:30 IST)
தமிழகம், இந்த ஆட்சியில் இழந்து விட்ட பெருமைகளை மீட்க வழி விட்டு கோட்டையிலிருந்து அதிமுக அரசு வெளியேற வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கொடுங்குற்றங்களின் தலைநகரமாகி விட்டது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 173 மூத்த குடிமகன்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மூத்த குடிமக்கள் கொலையில் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என ரத்தத்தால் பதிவாகிவிட்டது.
 
கடந்த ஒரு வருடத்தில் 2121 கொலை முயற்சி தாக்குதல் மூத்த குடிமகன்களுக்கு எதிராக நடைபெற்று அதிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறிவிட்ட கொடுமை வடுவாக காட்சியளிக்கிறது. 1805 கொலைகளும், 2922 கொலை முயற்சிகளும் நிகழ்ந்துள்ளதால் தென் மாநிலங்கள் அளவிலும் தமிழகம் முதல் மாநிலமாக மாறி, மாநிலத்தின் பெருமை குழி தோண்டி புகைக்கப்பட்டுள்ளது.
 
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 72 பேர் கொலை செய்யப்பட்டு அதிலும் தமிழகம் நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக மாறிய துயரம் நடந்துள்ளது.
 
ஏற்கனவே, குற்றம் புரிந்து தண்டனை பெற்ற குற்றவாளிகளே மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அவலம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. கடந்த ஆண்டில் இப்படி மூன்றாவது முறையாக குற்றம் புரிந்தோர் 688 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 
மதுவிலக்கு சட்டப்படி 1,07171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்தக் குற்றங்களிலும் தமிழ்நாடு, நாட்டில் உள்ள மாநிலங்களில் இரண்டாவது மாநிலமாகி தள்ளாடுகிறது. குழந்தை திருமணம் தொடர்பாக 42 வழக்குகளும் கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அது போன்ற குற்றங்களிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகி தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எப்படி தோற்று விட்டது என்பதற்கு இதெல்லாம் அடுக்கு அடுக்கான ஆதாரங்களாக அணி வகுத்து நிற்கின்றன.
 
திமுக ஆட்சியில், தமிழ்நாடு மக்கள் நலத்திட்டங்களிலும், தொழில்துறை முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கியது. ஆனால் இன்று அதிமுக அரசு தமிழகத்தை குற்றச்செயல்களில் முன்னனி மாநிலமாக்கி விட்டது.
 
சமுதாயத்தில் எந்தத் தரப்பு மக்களும் அதிமுக ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை என்பதும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது என்பதும் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை மூலம் நிரூபணம் ஆகி விட்டது.
 
தமிழக காவல்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அது ஆளும் கட்சியின் ஏவல் துறையாக மாற்றப்பட்டு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தான் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி சட்டம் ஒழுங்கு சீர் குலைவுக்கும் காரணமாக அமைந்து இருக்கிறது. ஆகவே மக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் நிலை நாட்ட அதிமுக அரசு தன் கடமையை செய்ய வேண்டும்.
 
அப்படி முடியவில்லை என்றால் தமிழகம் இந்த ஆட்சியில் இழந்து விட்ட பெருமைகளை மீட்க வழி விட்டு கோட்டையிலிருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :