3 சிலிண்டர்கள் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. தொழில் தொடங்க வட்டியில்லா கடன்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய ஈபிஎஸ்
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்களைக் கவரும் வகையிலான அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்களின் நலன் கருதி, வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டு, அந்தத் தொகையை அரசே ஏற்கும் என்றார்.
மேலும், முதியோர் ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சிறுபான்மையின மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக வட்டி இல்லா சுயதொழில் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
திமுக அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்து, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அவர் திட்டவட்டமாக கூறினார். இந்த 'மெகா' அறிவிப்புகள் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva