அதிமுக கவுன்சிலரின் மகன் வெட்டி கொலை: திண்டுக்கல்லில் பரபரப்பு


Suresh| Last Updated: புதன், 13 ஏப்ரல் 2016 (09:21 IST)
திண்டுக்கல்லில் அதிமுக கவுன்சிலரின் மகன் வெட்டி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி ஆறுமுக சேர்வை தெருவைச் சேர்ந்த சரோஜா 13 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
 
இவரது மகன் சந்திரமோகன் என்ற பாலன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், பாலன், வீட்டிலிருந்து சன்னாசி சேர்வை சந்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது, அவரை திடீரென வழி மறித்து மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது.
 
இந்த தாக்குதலால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
 
இந்நிலையில், பாலன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர், பாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :