1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2016 (15:09 IST)

பேனர்களை அகற்றியதற்காக கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகார நடவடிக்கை: இளங்கோவன்

பேனர்களை அகற்றியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு சர்வாதிகார நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக டிசம்பர் 30 ஆம் தேதி இரவே போயஸ் தோட்ட இல்லத்தில் தொடங்கி திருவான்மியூர் வரை ஜெயலலிதா செல்லும் சாலை நெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் தொடர்ச்சியாக அடுக்கி வைத்ததைப் போல வரலாறு காணாத வகையில் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த வழியாக ஜெயலலிதா பயணம் செய்த போது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.
 
இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகிற நிலை ஏற்பட்டது.
 
பொதுக்குழு நடைபெறுகிற இடத்தை நோக்கி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றக்கோரி அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் திருவல்லிக்கேணி, அபிராமபுரம் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.
 
ஆனால் புகாரை பதிவு செய்யாமல் புகார் கொடுத்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அறப்போர் இயக்க இளைஞர்கள் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பேனர்களை அகற்றுகிற முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதை சகித்துக் கொள்ளாத அதிமுக வினர் அந்த மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் முன்பாகவே கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டதோடு அந்த மூன்று இளைஞர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான அக்தர் அகமது, முதுகலை மின் பொறியியல் பட்டதாரி ஜெயராம் வெங்கடேசன், நியூயார்க் பல்கலைக்கழக பட்டதாரி சந்திரமோகன் ஆகிய இளைஞர்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு சர்வாதிகார நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
 
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
 
அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிற போது, டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அகற்ற முற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு சட்டவிரோத நடவடிக்கை யாகும்.
 
எனவே, சட்டத்திற்குட்பட்டு செயல்பட்ட அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
 
அப்படி விடுதலை செய்யப்படவில்லையெனில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக போர்க்கோலம் பூண்டு நீதிக்காக நிச்சயம் போராடுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன்  கூறியுள்ளார்.