அண்ணாநகர் தொகுதி செழிப்பாக இல்லை: வாக்களித்த பின் நடிகர் விஷால் விமர்சனம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணாநகர் தொகுதியில் ஓட்டு போட வந்த பிரபல நடிகர் விஷால், அத்தொகுதியின் நிலை குறித்து முன்வைத்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அண்ணாநகர் தொகுதி பெயரளவிற்கு தான் வளர்ந்த தொகுதியாக தெரிகிறது, ஆனால் எதார்த்த நிலை வேறாக உள்ளது என சுட்டிக்காட்டினார். குறிப்பாக, "அண்ணாநகர் செழிப்பாக இல்லை" என்று அவர் குறிப்பிட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த காலங்களில் பெய்த கனமழையின் போது அண்ணாநகர் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. முறையான வடிகால் வசதிகள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என அவர் சாடினார்.
வெள்ளத்தால் நாங்கள் பெரும் துயரத்தை சந்தித்தோம். அந்த பாதிப்புகள் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. அண்ணாநகர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும், நவீனப்படுத்தப்படவும் வேண்டியது அவசியம்" என விஷால் வலியுறுத்தினார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் களமிறங்கியுள்ள இந்தத் தேர்தலில், தொகுதியின் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து விஷால் பேசியுள்ளது அண்ணாநகர் மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Edited by Siva
