வேட்புமனுவில் 100 கோடி சொத்துக்களை மறைத்தாரா விஜய்? வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களை மறைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் வருமான வரித்துறை பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு முக்கிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் காட்டப்பட்டுள்ள சொத்து மதிப்புகளில் பெரும் முரண்பாடு எழுந்துள்ளது.
விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின்படி:
பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தன்னிடம் மொத்தம் ரூ. 115.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே வேலை திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில் தன்னிடம் மொத்தம் ரூ. 220.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் காண்பித்துள்ளார்.
ஒரே நபர், வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் சொத்து மதிப்பில் சுமார் 105 கோடி ரூபாய் வித்தியாசம் இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், விஜய் தனது வேட்புமனுவில் 100 கோடிக்கும் மேலான சொத்துக் கணக்கை மறைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
