வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2016 (10:25 IST)

இனிமேல் அரசியலே வேண்டாம்ண்ணே : எஸ்கேப் ஆகும் வடிவேலு

இனி அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என நகைச்சுவை நடிகர் வடிவேலு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.


 

 
2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். விஜய்காந்திற்கும் தனக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து, விஜயகாந்தை திட்டுவதற்கு அந்த பிரச்சாரத்தை பயன்படுத்திக் கொண்டார்.
 
ஜெயலலிதாவை பற்றி எங்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாத வடிவேலு, போகும் இடமெல்லாம், விஜயகாந்தை கேவலமாக திட்டி தீர்த்தார். ஆனால் தேர்தல் முடிவு விஜயகாந்திற்கு சாதகமாகவும், திமுகவிற்கு பாதகமாகவும் அமைந்து, ஜெயலலிதா முதலமைசர் ஆனார். விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனார்.
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் வடிவேலு எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. தனக்கு நெருக்கமான சில நண்பர்களை மட்டுமே சந்திப்பது என தன் நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொண்டார்.  மூன்று நான்கு வருடங்கள் திரைப்படங்களில் கூட தலை காட்டவில்லை வடிவேலு.
 
அதன்பின் தெனாலி ராமன், எலி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இரண்டு படங்களும் பணால் ஆனது. எலி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது “அரசியல் கடையை தற்போது மூடி வைத்திருக்கிறேன். அதை எப்ப வேணும்னாலும் திறக்காலாமே” என்று கூறினார்.
 
தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வடிவேலு என்ன செய்யப்போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால் இனிமேல் அரசியலே வேண்டாம் என வடிவேலு முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்காமனவர்கள் கூறியுள்ளனர்.
 
காரணம், திமுகவுக்கு ஆதரவாக இறங்கி, விஜய்காந்தை கடுமையாக திட்டி, கிண்டலடித்து பிரச்சாரம் செய்தார் வடிவேலு. ஆனால், இப்போது அதே திமுக, கூட்டணிக்காக விஜயகாந்திற்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது. ஏன்... காத்துக் கிடக்கிறது. இது வடிவேலுவை கடுமையாக பாதித்துள்ளதாம். இதற்காகவா நான் அப்படி பிரச்சாரம் செய்தேன் என்று நொந்து கொண்டாராம். ( பாவம்..அரசியல் பற்றி இப்போதுதான் அவருக்கு புரிந்திருக்கும் போல...)
 
இதற்கிடையில், அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்ய அவருக்கு பலவழிகளில் தூது விடப்பட்டதாம். ஆனால் நீங்கள் அழைத்ததற்கு நன்றி. இனிமேல் நமக்கு அரசியலே வேண்டாம்ண்ணே.. என்று மறுத்துவிட்டாராம் வைகைப் புயல். 
 
இனிமேல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும், நாயகன், காமெடி என அனைத்திலும் ஒரு ரவுண்டு வர தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.