திருச்சி அருகே மரத்தின் மீது வேன் மோதி விபத்து: ஆசிரியை உட்பட 5 பேர் உயிரிழப்பு


Suresh| Last Updated: வெள்ளி, 11 மார்ச் 2016 (08:24 IST)
திருச்சி அருகே மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் ஆசிரியை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 


சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு ஸ்வர்ஷா என்ற 11 மாத குழந்தை உள்ளது. சந்திரசேகரின் தந்தை செல்வம், தாய் மகேஷ்வரி ஆசிரியையாக பணியாற்றியவர்.
 
இந்த தம்பதியினருக்கு நாகை மாவட்டம் திருக்கடையூரில் இன்று (11.03.2016) மணிவிழா நடைபெறுவதாக இருந்தது.
 
அத்துடன், சந்திரசேகரின் மகள் ஸ்வர்ஷாவுக்கு வேளாங்கண்ணி ஆலயத்தில் முடிகாணிக்கை செலுத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
 
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சந்திரசேகர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்றுவிட்டு பின்னர், அங்கிருந்து திருக்கடையூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
 
அதன்படி, சேலத்தில் இருந்து சந்திரசேகர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு வேனில் புறப்பட்டார்.
 
அந்த வேனை சேலம் கொட்டசேடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராமராஜன் ஓட்டினார். அந்த வேனில் ஓட்டுநர் உட்பட 14 பேர் இருந்தனர்.
 
அந்த வேன் காலை 8 மணியளவில் திருச்சி மாவட்டம் குணசீலத்தை அடுத்த மஞ்சக்கோரை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
 
இந்நிலையில், அந்த வேனுக்கு முன்பாக மற்றொரு குடும்பத்தினர் காரில் நாகூர் தர்காவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
 
இரு வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது, தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மாணவ - மாணவிகளுடன் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது.
 
அந்த வாகனம் ஒரு வளைவில் திரும்பியபோது, முன்னால் சென்ற கார் எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.
 
இதனால் வேன் ஓட்டுநர் ராமராஜன், அந்த வாகனங்கனின் மீது மோதாமல் தடுக்க வாகனத்தை இடதுபுறமாக திருப்பினார்.
 
அப்போது, அந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், வேனின் முன்பகுதி நொறுங்கியது.
 
இதில், வேனுக்குள் இருந்த மகேஷ்வரி, தாரணி, மற்றொரு மகேஷ்வரி, ஷீலா ஆகிய 4 பெண்கள் மற்றும் வேன் ஓட்டுநர் ராமராஜன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்த விபத்தில், அந்த வேனுக்குள் இருந்த சந்திரசேகர், அவருடைய மனைவி அனிதா மற்றும் அவர்களின் உறவினர்களான கோபாலகிருஷ்ணன், மாதேஷ்வரன், பவ்யா, சுதர்ஷன், வெங்கடேஷ் பாபு,  குழந்தை ஸ்வர்ஷா உள்ளிட்ட 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.
 
இதே போல, தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவி நர்மதா, மாணவர்கள் வினோத் ராஜ், அறிவழகன், மணிகண்டன் ஆகிய 4 பேரும், காரில் சென்ற 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.
 
இந்நிலையில், இந்த விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடிந்து, காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :