வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (16:04 IST)

பாடகர் கோவன் சினிமாக்காரர்களுக்கு எச்சரிக்கை; அவர்களுக்கும் இதே நிலைமை வரலாம்

எனக்கு வந்த நிலைமை எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதே போன்ற நிலைமை வரலாம் என்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்திருக்கும் பாடகர் கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 
தமிழக அரசின் மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர்,
 
”மூடு டாஸ்மாக்கை மூடு நீ….
மூடு டஸ்மாக்கை மூடு
நீ ஓட்டுப் போட்டு மூடுவான்னு
காத்திருப்பது கேடு..”
 
- என்ற பாடலை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
 
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி குற்றவியல் காவல் துறையினர், இப்பாடலைப் பாடிய பாடகர் கோவனை நள்ளிரவு திருச்சியில் உள்ள அவரது வீட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
 
தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ள கோவனுக்கு, திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ’’டாஸ்மாக் மதுபான கடைகளால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளை விளக்கி தான் நான் பாடல் படித்தேன். இதில் உள்நோக்கம் கிடையாது.
 
ஆனால் போலீசார் என் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் என கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர். என் மீது தேச துரோக வழக்கும் பதிவு செய்தனர். தனிமை சிறையில் என்னை மன ரீதியாக சித்ரவதை செய்தனர். இதனால் எங்கள் அமைப்பு முடங்கி விடாது. 
 
நாங்கள் 30 ஆண்டுகளாக சமூக அவலங்களுக்கு எதிராக போராடி வருகிறோம். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அடக்கு முறை மூலம் எங்கள் போராட்டங்களை தடுத்து விட முடியாது.
 
தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் எனது பாடல்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு தான் எதிர்மறை நன்றி சொல்ல வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள். 
 
ஒரு கலைஞன் என்ற அடிப்படையில் எனது கைதை திரைத்துரையினரும் கண்டித்து இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அதற்காக வருத்தப்படவில்லை.
 
ஆனால் எங்களுடைய இந்த போராட்டத்தில் அவர்களும் இனி வரும் காலங்களில் அவர்கள் இணைந்து போரட வேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதே போன்ற நிலைமை வரலாம்” என்று கூறியுள்ளார்.