1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A Amalraj IPS Takes Charge As New Chennai Metropolitan Police Commissioner

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் இன்று சென்னை காவல் ஆணையர்.. அதிரடி உத்தரவு..!

சென்னை
சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள் இன்று காலை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து, காவல்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் அதிரடி இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜை நியமித்துத் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாற்றப்பட்டு, கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். 
 
இந்நிலையில், இன்று காலை சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஏ. அமல்ராஜ், காவலர்களின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய ஆணையராக பொறுப்பேற்றார்.
 
இதற்கு முன் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகித்த அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ் அவர்கள், தற்போது சிபிசிஐடி பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய ஆணையர் அமல்ராஜ் அவர்களின் நியமனம் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தனியார் மருத்துவமனைக்கு அனுமதி: மருத்துவதுறை அமைச்சர் அருண்ராஜ்