வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (19:47 IST)

ஜெயலலிதாவின் 5 ஆண்டு ஆட்சியில் 9948 படுகொலைகள் - ராமதாஸ் கண்டனம்

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் 9948 படுகொலைகள், சுமார் ஒரு லட்சம் கொள்ளை மற்றும் திருட்டுகள் நடந்துள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கோயம்பேடு சந்தை அருகில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த கும்பலை காவல்துறை கைது செய்து, அக்கும்பலிடமிருந்து அதிநவீன துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறது.
 
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எந்த தடையும், அச்சமும் இல்லாமல் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 
சென்னையில் பிடிபட்ட கும்பல் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் இப்போது புதிதாக ஈடுபட்டவர்கள் அல்ல. 4 பேர் கொண்ட இக்கும்பல் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பல வாரங்களாக இவர்களை கண்காணித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து துப்பாக்கி வாங்க விரும்பும் போக்கிலிகளைப் போல நடித்து ஓரிடத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
 
பிடிபட்ட கும்பலும் நீண்டநாட்களாக கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதையும், பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கு கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து ரூ.1 லட்சத்துக்கு விற்பதையும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
 
இவர்கள் மட்டுமின்றி, மேலும் பல கும்பல்களும் கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டிருக்கின்றன. தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம்  மீண்டும் தலைவிரித்தாடுவதை இந்த வாக்குமூலம் உறுதி செய்கிறது.
 
தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. ஏதேனும் பெரிய அளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் போது கள்ளத்துப்பாக்கி விற்பனையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதும், அதன்பின் நிறுத்தப்படும் கள்ளத் துப்பாக்கி விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் தலைதூக்குவதும் வாடிக்கையாகிவிட்டன.
 
கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான எந்த முயற்சியையும் தமிழகத்தை ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேற்கொள்ளவில்லை.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
 
தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகியிருக்காது. மாறாக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதால் தான் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆலமரமாக விழுது விட்டிருக்கிறது.
 
கள்ளத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் காமேஷ், அவருடன் வந்த போக்கிலி ஒருவரால் கள்ளத்துப்பாக்கி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
 
மதுரையில் சில வாரங்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜு பயன்படுத்தி வந்த இரு அலுவலகங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு ஒருவாரம் முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
அண்மையில் சென்னை வியாசர்பாடியில் பள்ளி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்தனர். இந்த குற்றச்செயல்கள் நடந்து பல மாதங்களாகியும் இவற்றில் ஒரு குற்ற வழக்கில்  கூட இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.
 
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் 5 ஆண்டுகளில் சட்டம் -ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 9948 படுகொலைகள், சுமார் ஒரு லட்சம் கொள்ளை மற்றும் திருட்டுகள் நடந்துள்ளன.
 
இவை போதாது என கள்ளத்துப்பாக்கி கலாச்சாரமும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
 
கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை தகர்த்து எறியும் திறமை தமிழக காவல்துறைக்கு உண்டு. ஆனால், இதுவரை ஆட்சியாளர்களின் பிடியில் இருந்ததால் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. இப்போது அரசு நிர்வாகத்தில் ஆட்சியாளர்கள் பிடி அகன்றுவிட்ட நிலையில், காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.