வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (09:01 IST)

தமிழக மீனவர்கள் 66 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 66  மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
 
ராமேஸ்வரம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 66 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களை விடுதலை செய்து ஊர்காவல் துறை மற்றும் பருத்தித் துறை நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
 
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 66 பேரும் விரைவில் காரைக்கால் துறைமுகத்துக்கு வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
 
சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் அருகே இந்திய கடல் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மீன் பிடித்துக்கொண்டிருந்த 30 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
 
அவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
 
இதையடுத்து நேற்று மாலை 30 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் 2 வாகனங்களில், சென்னை துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
பின்னர், அங்கிருந்து கப்பல் மூலம் 30 மீனவர்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.