வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2015 (04:10 IST)

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 6 பேருக்கு திடீர் கல்தா: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி

திருச்சிக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்திற்கு முறையான ஏற்பாடுகளை செய்யாத 6 மாவட்ட தலைவர்களை அக்கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
 

 
ஜூலை 23ஆம் தேதி திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
 
இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், ஒரு சில மாவட்டத் தலைவர்கள் சரியான வாகன வசதி மற்றும் தொண்டர்களை முறையாக அழைத்துவரவில்லை என புகார் எழுந்தது.
 
இதனையடுத்து, புகாருக்குள்ளான 6 மாவட்ட தலைவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும், அம்மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சரவணன், தர்மபுரி மாவட்ட தலைவர் இளங்கோவன், சேலம் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோபால், பெரம்பலூர் மாவட்ட தலைவர் மதனகோபால் ஆகியோர் மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து உடனே விடுவிக்கப்படுகின்றனர்.
 
இவ்வாறு, விடுவிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு பதில், புதிய பொறுப்பாளர்களாக ஜெயப்பிரகாஷ் (திருச்சி வடக்கு), ராஜாராம் வர்மா (தர்மபுரி), மேகநாதன் (சேலம் மாநகரம்), பெரிய சாமி (சேலம் கிழக்கு), முருகன் (சேலம் மேற்கு), தமிழ்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 
நீக்கப்பட்ட இந்த 6 மாவட்ட தலைவர்களும், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கே.வி. தங்கபாலு ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.