1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (15:40 IST)

கரூரில் குழந்தை பெண் தொழிலாளர்கள் 6 பேர் மீட்பு: புரோக்கர் கைது

கரூரில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது குழந்தை பெண் தொழிலாளர்கள் 6 பேரை மீட்டு அந்த பெண் குழந்தைகளை வேலைக்கு சேர்த்து வந்த புரோக்கரை கைது செய்த போலீஸாரால் பரபரப்பு ஏற்பட்டது.


 

கரூர் பேருந்து நிலையத்திலும் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் ஆறு சிறுமிகளை அழைத்து சென்றதை பார்த்த போலீஸார் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞரின் பெயர் குமரேஷன் என்றும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் தஞ்சை மாவட்டம், பேராவூரணி சுற்றுவட்ட கிராமங்களை சார்ந்த மகாலட்சுமி (வயது 16), அவர்களது தங்கை திலகவதி (வயது 15), அவருக்கு அடுத்த தங்கை மாரியம்மாள் (வயது 14), மேலும் அதே போல பரமேஸ்வரி (வயது 15), அவரது தங்கை ரேணுகா (வயது 13), மற்றும் சந்தியா (வயது 16) என்றும் இவர்களை கரூர் சின்னாண்டாங்கோயில் சாலையில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் வேலைபார்ப்பதற்காகவும், இந்த குமரேஷன் என்ற இளைஞர் புரோக்கராக செயல்பட்டதும் தெரியவந்தது.

அந்த குழந்தை பெண் தொழிலாளர்களை மீட்ட போலீஸார் மேலும் மேற்கொண்ட விசாரணையில் மேலும் 10 சிறுமிகள் அந்த சாயப்பட்டறையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து கரூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் செயல்படும் சாயப்பட்டறைகளில் இது போன்று பல சிறுமிகள் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்து அழைத்து வந்து குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வருவதை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்து சிறுமிகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.