வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (04:50 IST)

வெள்ள நிவாரண பணிகளுக்கு 500 கோடி போதாது: விஜயகாந்த்

மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 500 கோடி ரூபாய் போதாது என விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்றிரண்டு இடங்களை பார்வையிட்டு, பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் குறித்தும், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதும், மழைநீர் வெளியேற்றப்பட்டது குறித்துமான பூசி, மெழுகும் புள்ளிவிவரங்கள்தான்  உள்ளன.
 
அதைப் பார்க்கும்போது கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் கன மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த சேதங்கள், கடும் பாதிப்புகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை என்பதே உண்மையாகும்.
 
ஒரே நாளில் 27 செ.மீ முதல் 33 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதனால் பாதிப்பையும், சேதத்தையும் தவிர்க்க இயலவில்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
 
இதையேதான் 2005ல் 28 செ.மீ மழை பெய்தபோதும் கூறினார். கடந்த பத்தாண்டுகளாக மழைநீர் வடிவதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டுமானத்திற்காக சுமார் ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது என்னவானது?
 
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகளில், மழைநீரும், கழிவு நீரும் உட்புகுந்து, வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற சிறப்பை பெற்ற கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு, வடபழனியிலிருந்து வரமுடியாத வகையில் மழைநீர் தேங்கி பேருந்து போக்குவரத்தே நின்று போனது.
 
சென்னை கிழக்கு கடற்கரை சாலை(ECR) - தாம்பரம் இணைப்பு சாலையும், தாம்பரம் - மகாபலிபுரம் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை சென்னைக்கு இதுவரையிலும் ஏற்பட்டதில்லை. சென்னையின் நிலையை முதலமைச்சர் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இதை மட்டும் கூறியுள்ளேன்.
 
கோயம்பேடு மேம்பாலம் வரை வந்த முதல்வர் ஜெயலலிதா, வடபழனி, கிண்டி, தாம்பரம், ECR, திருவான்மியூர் மற்றும் அடையாறு வழியாக சென்றிருந்தால் ஒட்டுமொத்த சென்னையின் நிலவரத்தை தெரிந்து கொண்டிருக்கலாம். சென்னையின் பிரதான போக்குவரத்து சாலைகளின் நிலையே இப்படி என்றால், பிற பகுதிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பிற மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. சுமார் ஐந்தாயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் நிவாரண உதவிக்கும், மறு சீரமைப்பிற்கும் 500 நூறு கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக வந்துள்ள அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தையும், கண்துடைப்பிற்காக இது அறிவிக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் கடந்த 2005ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இதுபோன்ற மழையால் ஏற்ப்பட்ட பாதிப்பிற்காக 13,685 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய  முதல்வர் ஜெயலலிதா 931 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தார்.
 
2011ல் தானே புயலால் 5250 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு என்று கூறிவிட்டு ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தார். அதனால் நிவாரண பணிகளும், உதவிகளும் முழுமையாக நடைபெறவில்லை. மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உரியவர்களுக்கு முறையாகப் போய்ச்சேரவில்லை என்றும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததென்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
 
பண்ருட்டி தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பி.சிவகொழுந்து  பெயரில், அவருடைய கையெழுத்தை போலியாக போட்டு, வெள்ள நிவாரண நிதி பெற்றதாக கூறப்பட்ட முறைகேடு குறித்து, சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும், அதுகுறித்து விசாரணையோ, மேல் நடவடிக்கையோ எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
 
சட்டமன்ற உறுப்பினரின் பெயரிலேயே முறைகேடு செய்யப்பட்டது என்றால், சாதாரண, சாமான்ய மக்களின் நிலையைப்பற்றி சொல்லத் தேவையில்லை.
 
தானே புயல் பாதித்த பகுதியில் ஒரு லட்சம் கான்க்கிரீட் வீடுகளை கட்டித்தருவாக சொல்லி, நிதி ஒதுக்கவே பத்துமாதமாகியது. சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாகியும் கான்க்ரீட் வீடுகட்டும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. இதுதான் அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கான சான்றாகும்.
 
சென்னையில் மழைநீர் செல்லும் பெரும்பாலான நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டும் காணாமல், நீர்வழிப்பாதையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு நிர்வாகம் அனுமதி அளித்ததும், மழைநீர் வடிகால்கள் முறையாக அமைக்க்கப்படாமல், தூர்வாரப்படாமல் இருப்பதும், சென்னையை சுற்றியுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரி, கரைகள் உயர்த்தப்படாமல் இருந்ததுமே இந்த பாதிப்புகளுக்கும், சேதங்களுக்கும் முழுமுதற்காரணமாகும்.
 
சட்டமன்றம் நடக்கும்போதெல்லாம் 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை வெளியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இயற்கை பேரிடர் பாதிப்புகளிலும் வெற்று அறிவிப்புகளை வெளியிடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில், போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பும் வகையில் நிவாரண பணிகளை துரிதபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.