1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (11:15 IST)

45 குண்டுகள் முழங்க சென்னை ராணுவ அதிகாரியின் உடல் தகனம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சென்னை ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன் உடல் ராணுவ மரியாதையுடன் பெசன்ட் நகர் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ஆயிரக்கணக் கான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனும் (வயது 32), மற்றொரு ராணுவ வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலியான முகுந்தின் தந்தை வரதராஜன், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார்.
 
இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த் வரதராஜன். 2 மகள்களும் உள்ளனர். முகுந்திற்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு அர்ஷியா (3) என்ற மகள் உள்ளார். இவர்கள் பெங்களூர் ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
 
தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான மேஜர் முகுந்த் வரதராஜனின் உடல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் நேற்றுமுன்தினம் மாலை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
 
நேற்று காலை 9 மணிக்கு உடல் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. மேஜர் முகுந்த் உடலுக்கு அவரது தந்தை வரதராஜன், தாயார் கீதா, மனைவி இந்து மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். முகுந்த் உடலை பார்த்து அவரது தந்தை வரதராஜன், தாயார் கீதா, மனைவி இந்து ஆகியோர் கதறி அழுதனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
 
மகள் அர்ஷியாவை தூக்கி வந்த முகுந்தின் மனைவி தந்தையின் உடலை காட்டினார். குழந்தை அர்ஷியா தந்தையின் முகத்தை பார்த்த காட்சியை பார்த்த அனைவரும் கண்கலங்கினர். 
 
இதனைத்தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஆர்.ஜி.கிருஷ்ணன், ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி மேஜர் ஜெனரல் முரளி உள்பட ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன், பல்லாவரம் எம்.எல்.ஏ ப.தன்சிங், தாம்பரம் நகரமன்ற தலைவர் ம.கரிகாலன், பரங்கிமலை ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், மனைவி இந்து ஆகியோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் டி.கே.எம்.சின்னையா முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மேஜர் முகுந்தின் மனைவி இந்துவிடம் வழங்கினார். அப்போது காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் உடனிருந்தார்.
 
மேஜர் முகுந்தின் உடலுக்கு தி.மு.க சார்பில் மாவட்ட தி.மு.க செயலாளர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட தலைவர் எஸ்.டி. நெடுஞ்செழியன், முன்னாள் நகரமன்ற தலைவர் மணி, முன்னாள் கவுன்சிலர்கள் வி.என்.வேணுகோபால், வி.ஆர்.சிவராமன், பா.ஜ.க தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை, தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதா, விடுதலைசிறுத்தைகள் நகர செயலாளர் சாமுவேல், ம.தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் மாசிலாமணி உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
 
மேலும், முகுந்தின் உடலுக்கு அவர் படித்த கிறிஸ்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மேஜர் முகுந்தின் உடலை தேசிய கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் வைத்து ராணுவ வீரர்கள் தூக்கி வந்தனர்.
 
அப்போது 25-வது பட்டாலியன் பஞ்சாப் ரெஜிமென்ட் கமாண்டிங் ஆபீசர் கர்னல் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் ராணுவ மரியாதை செய்து ராணுவ வீரர்கள் சோககீதம் இசைத்தனர்.
 
பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேஜர் முகுந்தின் உடல் ஏற்றப்பட்டு பெசன்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது மேஜர் முகுந்தின் வீட்டை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர்மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.
 
பெசன்ட் நகர் மயானத்தில் மேஜர் முகுந்தின் உடலுக்கு தென்பிராந்திய ராணுவ தளபதி ஆர்.ஜி.கிருஷ்ணன், முப்படை அதிகாரிகள், பஞ்சாப் ரெஜிமென்ட்டை சேர்ந்த 250 அதிகாரிகள், பரங்கிமலை ராணுவ பயிற்சி முகாமை சேர்ந்த பிரிகேடியர்கள் ராஜ்கோபத், பகிப்சிங், சஞ்சய் கண்ணன் உள்பட 200 அதிகாரிகள், வீரர்கள், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
 
மேஜர் முகுந்த் அணிந்து இருந்த ராணுவ உடை, தொப்பி, அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியின் மேல் சற்று நேரம் வைக்கப்பட்டு, பின்பு அவர் மனைவி இந்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை கண்ணீர் மல்க இந்து பெற்றுக்கொண்டார்.
 
இதன் பின்னர் 45 குண்டுகள் முழங்க பகல் 12.28 மணிக்கு மேஜர் முகுந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. மயானம் முழுவதும் பொதுமக்கள் மாணவர்களால் நிறைந்து இருந்தது.
 
துப்பாக்கி சூட்டில் பலியான ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் உடல் தகனம் செய்ய பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், ராணுவ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வசித்த பகுதியான கிழக்கு தாம்பரத்தில் இருந்து திரளான ஆட்டோ டிரைவர்கள் வந்திருந்து, மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தங்களின் துக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக சட்டையில் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து வந்திருந்தனர்.
 
மேலும், சென்னை கிழக்கு தாம்பரம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம்’ சார்பில் நேற்று ஒருநாள் அந்த பகுதியில் (கிழக்கு தாம்பரத்தில்) எந்த ஆட்டோவும் ஓட்டாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.