பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் அதிகமாக வாங்கிய 23 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை...!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. சில்லறை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையான எம்.ஆர்.பி தொகையுடன் சேர்த்து கூடுதலாக 20 ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.
இந்த புகார்களை தொடர்ந்து, கூடுதலாக பணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் அதிரடி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள மதுக் கடைகளில் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையின் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற 23 பணியாளர்களை டாஸ்மாக் நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், பொதுமக்கள் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 717 மதுக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த தொடர் நடவடிக்கைகள் மற்றும் கடைகள் மூடல் உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Edited by Siva
