வலிமையான கூட்டணியுடன் அதிமுக, திமுக.. தனித்து போட்டியிடும் தவெக.. யாருக்கு வெற்றி?
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் ஆளும் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் என தனது வெற்றி கூட்டணியை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, "200 தொகுதிகள்" என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகளுடன் ஒரு பலமான கூட்டணியை அமைத்து, இழந்த ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது.
இந்த இருமுனை போட்டிக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் "தனித்துப் போட்டி" என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய பரிசோதனையாக பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள், தவெக சுமார் 10% முதல் 15% வரையிலான வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு சாதகமாக இருப்பது திராவிட கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மிக வலுவான அடிமட்ட கட்டமைப்பை கொண்டுள்ளன. தவெகவின் வரவு, எதிர்க்கட்சி வாக்குகளை பிரித்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையுமா அல்லது ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியிலேயே கை வைக்குமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய விவாதம்.
பண பலம், கூட்டணி பலம் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் "மாற்றத்திற்கான ஏக்கம்" யாருக்கு வெற்றியை தரும் என்பது 2026 மே மாதத்தில் தான் தெரியும்.
Edited by Siva