1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2016 (19:21 IST)

ஜெயலலிதா படம் விவகாரம்: விஜயகாந்தை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை

தஞ்சையில் ஜெயலலிதாவின் படம் அகற்றப்பட்டது தொடர்பான வழக்கில், விஜயகாந்தை  கைது செய்ய மேலும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.


 
 
 
தேமுதக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பயணிகள் நிழற்குடை மேலே இருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றியது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது தஞ்சை அதிமுக எம்எல்ஏ ரங்கசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடைவிதிக்க கோரி விஜயகாந்த், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, ஜனவரி 5ம் தேதி வரை விஜயகாந்தை கைது செய்ய நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதையடுத்து, தடை இன்றுடன் நிறைவடைந்ததால் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, விஜயகாந்த்தை  கைது செய்யக்கூடாது என்றும் வழக்கை இரண்டு வாரம் ஒத்திவைத்தும் உத்தரவிட்டார். 
 
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.