வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஜூலை 2015 (16:15 IST)

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக சிலர் பொது மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணைகள் வழங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிலைய மேலாளர் குருநாதன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
இது குறித்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி தியாகராய நகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றது. அப்போது சைதாப்பேட்டை, சின்னமலையை சேர்ந்த பால்ராஜ், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த மகேந்திரன், அவரது மனைவி ராஜாத்தி, நாகராஜ், வத்தலகுண்டு அர்ஜூன்குமார் ஆகியோர் சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.
 
இதையடுத்து ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பால்ராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பால்ராஜ் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிந்தது. பிடிபட்ட மற்ற 4 பேர் மூலம் அவர் ஏஜெண்டுகள் அமர்த்தியுள்ளனர்.
 
அவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பதவிக்கேற்றார் போல் ரூ.15 லட்சம் முதல் 30 லட்சம் வரையில் பணம் பெற்று உள்ளார். மேலும், இன்னும் சில வாரங்களில் போலி பணி நியமன ஆணைகளை கொடுக்க இருந்ததும் தெரிந்தது.
 
இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.86 ஆயிரம் ரொக்கம், 68 வங்கி காசோலைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பால்ராஜ் உள்பட5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.