வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2016 (12:42 IST)

இலங்கை சிறைகளில் இருந்து 121 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறைகளில் இருந்து 121 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறைகளில் இருந்து 121 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


 
 
நாகப்பட்டினத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 12–ந்தேதி 111 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரையும் படகுகளுடன் சிறைபிடித்துச்சென்றனர். பின்னர் அனைவரும் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். 
 
விசாரணை முடிவில் 111 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று 111 மீனவர்களும் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதேபோல கடந்த 4–ந்தேதி மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களது காவல் முடிவடைந்த நிலையில் 10 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
விசாரணையின் முடிவில், 10 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 121 மீனவர்களும் இன்னும் ஓரிருநாளில் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.