வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia
Last Modified: ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (18:32 IST)

'நா‌ன் ஒரு ப‌ற்ற‌ற்ற ச‌ன்‌னியா‌சி': கருணா‌நி‌தி‌க்கு ஜெயல‌லிதா ப‌தி‌ல்

"அ.இ.அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 21 வருட காலமாக நாட்டு நலன், மக்கள் நலன், கட்சிப் பணி ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தி, ஒரு பற்றற்ற சன்னியாசி போல் நான் வாழ்ந்து வருகிறேன்" எ‌ன்று ஜெய‌ல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்னுடைய புகழுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், என் மீது சில அவதூறு குற்றச்சா‌ற்றுக்களை கருணாநிதி சுமத்தியுள்ளார். கருணாநிதியின் கடிதத்தில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

1991இல் "அப்போதைய'' பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை வரவேற்க அ.இ.அ.தி.மு.க. கழகத்தின் சார்பில் யாரும் சென்னை விமான நிலையத்திற்குப் போகவில்லை என்றும், எனவே ராஜீவ் காந்தியின் படுகொலை அ.இ.அ.தி.மு.க. கழகத்தினருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இல்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு‌தெரிவித்துக்கொள்கிறேன். 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அ.இ..தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பொதுக் கூட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், ராஜீவ் காந்தியும் கலந்து கொண்டோம். அதற்கு முன்னதாக ராஜீவ் காந்தியை நானே நேரில் விமான நிலையத்திற்கு‌ச் சென்று வரவேற்றேன்.

பின்னர் அகில இந்திய அளவில் ராஜீவ் காந்தியும் தமிழகத்தில் நானும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வேறு எந்தக் கூட்டத்திலும் நானும், ராஜீவ் காந்தியும் கலந்து கொள்வதாக‌திட்டம் ஏதும் இல்லை. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மரகதம் சந்திரசேகர் வற்புறுத்தலின் பேரில் 21.5.1991அன்று ஸ்ரீபெரும்புதூரில் நட‌ந்பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில்தான் ராஜீவ் காந்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் குறித்து எந்தவிதமான தகவலும் முன்கூட்டி எங்களுக்கு‌த் தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்றபோது நான் பர்கூரில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். இப்படிப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்ததற்குக் காரணம், 1989 ஜனவரி முதல் 1991 ஜனவரி வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகமாக இருந்ததுதான். பத்மநாபா உட்பட 13 பேர் சென்னையில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.

ராஜீவ் காந்தி கொலையில் எனக்குத் தொடர்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததாக கருணாநிதி கூறி‌யிருக்கிறார். ஆனால், ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் இதை மறுத்துள்ளது. அய‌ல்நாடுகளுக்கு இராணுவ உதவிகள் அளிப்பது குறித்து மாநில அரசுகளைக் கலந்து கொண்டோ, மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கலந்து கொண்டோ செய்யப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்ததெந்த இலாக்காக்கள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதைத் தெரிந்து கொண்டு மத்திய அரசை மிரட்டிய கருணாநிதிக்கு, தமிழர்களுக்கு எதிரான தீங்குகள் நிகழும்போது அதை‌தெரிந்து கொள்ளத் தெரியாதா? ஊடகங்களுக்குத் தெரியும்போது, மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு‌த் தெரியாதா? தெரிந்தும் தெரியாதது போல் நாடகம் ஆடிவிட்டு யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் கருணாநிதி.

நான் முதலமைச்சராக இருந்த போதுதான் இலங்கைக்கு மத்திய அரசு மூலம் இராணுவ உதவிகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே கருணாநிதிக்கு எதுவும் விளங்கவில்லை என்பது நன்றாகத் தெளிவாகிறது. நவீன ஆயுதங்கள் வழங்குதல், இராணுவப் பயிற்சி எல்லாம் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான் நிகழ்ந்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக இருந்த போதும், மத்திய அரசில் அங்கம் வகித்தது தி.மு.க.தான். எனவே, அதற்கும் கருணாநிதிதான் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்ததாக, நான் கோடநாடு, சிறுதாவூர், பையனூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று ஓய்வெடுப்பதாகக் கூறியிருக்கிறார் கருணாநிதி. நான் பையனூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோடநாடு, சிறுதாவூர் ஆகிய இடங்களுக்கு நான் சென்றாலும், அங்கு கட்சியினரை‌ச் சந்தித்துக் கொண்டும், கட்சிப் பணிகளை கவனித்துக் கொண்டும், தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் பணிகளை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும்தான் இருந்தேனே தவிர, ஓய்வு எடுப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை என்பதை‌ச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மக்கள் நலப் பணிகளில் நாட்டம் செலுத்தாமல், மகாபலிபுரத்தில் ஓய்வு, பெங்களூரில் ஓய்வு, மருத்துவமனையில் ஓய்வு, புதுப்புது‌படங்களை‌ப் பார்ப்பது என்று நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.

நான் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, என்னையும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதுப்படங்களை பார்க்கச் சொல்லி அழைப்புவிடுவார்கள், விடுகிறார்கள். ஆனால், நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். தற்போதும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஆட்சியில் இருந்தபோது எனது இல்லத்தில் இரவு ஒரு மணி வரை அரசாங்க வேலைகள் நடக்கும். உயரதிகாரிகள் என்னுடன் தொடர்பு கொண்டு தேவையான அறிவுரைகளை பெற்றுச் செல்வார்கள். அதனால்தான் எனது ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. தரமான மின்சாரம் தடங்கலின்றி வழங்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

பிரிவினைக் கொள்கை குறித்து நான் கேட்ட கேள்விக்கு, தொடர்பே இல்லாமல் பேரறிஞர் அண்ணா எழுதிய நூலை மேற்கோள் காட்டி அதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்தவன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைத் தவிர, அண்ணாவின் எந்தக் கொள்கையும் கருணாநிதியால் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 21 வருட காலமாக நாட்டு நலன், மக்கள் நலன், கட்சிப் பணி ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தி, ஒரு பற்றற்ற சன்னியாசி போல் நான் வாழ்ந்து வருகிறேன். இவ்வாறு தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி‌க் குறை கூற, முதலமைச்சர் கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் அறவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.