முதல்வருடன் எம்.கே.நாராயணன் இன்று மீண்டும் சந்திப்பு

சென்னை| Webdunia| Last Modified ஞாயிறு, 24 மே 2009 (15:43 IST)
இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், முதல்வர் கருணாநிதி இருவரும் இன்று காலை 2வது முறையாக பேச்சு நடத்தியுள்ளனர்.

இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில், பிரதமரின் தூதுவர்களாக எம்.கே.நாராயணனும், அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனனும் சிறிலங்காவுக்குச் சென்று அதிபர் ராஜபக்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தியபின் நாராயணனும், மேனனும் டெல்லி திரும்பியதுடன் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருடன் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்றிரவு சென்னை வந்த எம்.மே.நாராயணன், முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று 15 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். இதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.

இலங்கையில் தலைவர்களுடன் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் அவர் விளக்கிய நிலையில், இன்று காலை இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி தி.மு.க. கட்சித் தலைவர்களுடன் நடத்தப்படும் விவாதத்திற்கு இடையே, நாராயணன்-முதல்வர் இடையிலான சந்திப்பு 2வது முறையாக நிகழ்ந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :