மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற ரூ.16,350 கோடியில் புதிய திட்டம் - ஜெ

Webdunia|
FILE
தமிழக அரசு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற ரூ.16,350 கோடி செலவில் புதிய மின் திட்டங்கள் பற்றி இன்று தமிழ சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.

இது குறித்து அவர் சட்டப்பேரவை விதி 110இன் கீழ் கூறியதாவது, மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை எய்தும் வகையில் புதிய பல்வேறு மின் திட்டங்களின் விவரங்களை 25.4.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் நான் அறிவித்தேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுத் தொகை பல்வேறு நாளிதழ்களில் வெவ்வேறு விதமாக வெளிவந்துள்ளன. எனவே, புதிய திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுத் தொகை என்ன என்பதை தமிழக மக்கள் சரியாக அறிந்து கொள்ளும் வகையில், கீழ்க்காணும் விவரங்களை இந்த மாமன்றத்தின் மூலம் தெரிவிக்க விழைகிறேன்.
நீலகிரி மாவட்டத்தில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள், 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள், 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள், 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்கள் என 56 துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 20,000 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்படும் என்று நான் அறிவித்திருந்தேன்.
மொத்தத்தில், 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்காணும் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற விளக்கத்தை நான் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :