போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் முழுமையாக கடையடைப்பு நடந்தது!

Webdunia| Last Modified புதன், 4 பிப்ரவரி 2009 (18:20 IST)
சிறிலங்க இராணுவத்தால் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று நடந்த வேலை நிறுத்தமும், கடையடைப்பும் முழுமையாக நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. ஆகியவற்றின் எதிர்ப்பையும் தாண்டி, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. தமிழர் தேசிய இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்திய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் விடுத்த வேண்டுகோளை அடுத்து நடந்த இன்றைய முழு அடைப்பு முழுமையாக நடந்துள்ளது.
இரயில், பேருந்து போக்குவரத்து தடையின்றி நடந்தும், அரசு அலுவலகங்கள் பாதுகாப்புடன் இயங்கினாலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கடைகளும், வணிக நிறுவனங்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் உறுதி செய்கின்றன.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சந்தைகள் திறந்திருந்தும் வாங்குவதற்கு மக்கள் வராததால் காய்கறி விலைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.


இதில் மேலும் படிக்கவும் :